Wednesday, February 16, 2005

ஏன் இந்தக் கோபம்?

கடல் அன்னையே உன் மடியில்
கனவுடனே மிதந்தோமே
காலனாய் நீ தோன்றி
கடுகதியாய் உயிர் குடித்ததென்ன

பெற்ற அன்னையரை, வாய் பேசா குழவியரை
சுற்றமென இருந்த அப்பப்பா அம்மம்மாவை
மாமாவை மாமியரை அண்ணாவை தம்பியரை
சடுதியாய் உயிர் மாய்த்த மர்மமென்ன

அதிகாலை வேளையது சுறுசுறுப்பாய் இருக்கையிலே
சற்றும் எதிர்பாரா சங்காரம் செய்துவிட்டாய்
ஏழைகள் வாழ்வுதனை ஏற்றி வைத்த கடலம்மா
இப்போ மட்டும் எம்மை எட்டி உதைத்தனேம்மா


கட்டிய வீடெங்கே கும்பிட்ட கோயிலெங்கே
தாவி விளையாடிய குழந்தைகள்தான் எங்கே
சுற்றிலும் இருந்த சுற்றமெங்கே சூழலெங்கே
எல்லாம் முடித்துவிட்டு கடலே இப்போது தூக்கமென்ன

கறையான் அரித்த மரக்கட்டைகளாய்
நாம் வாழும் வேளையில்
இயற்கை அன்னையே உன் கோரமுகம் காட்டி
எம்மைச் சிதைத்ததென்ன

எங்கள் வாழ்வில்தான் சுற்றமில்லை என்றிருந்தோம்.
மற்றவர்களையும் இப்போ எங்களைப்போல் ஆக்கிவிட்டாய்
எவர்தான் எம்மீது வக்கிரங்கள் புரிந்தாலும்
சற்றும் சளைக்காமல் மீண்டும் நாமுயர்வோம்

- மதனசேகரம்
(வகுப்பு 8, விபுலானந்தா சிறுவர் இல்லம்)
01, 2005

1 Comments:

At 3:50 PM, Blogger சுடரகன்: சிவா முருகையா said...

"கட்டிய வீடெங்கே கும்பிட்ட கோயிலெங்கே
தாவி விளையாடிய குழந்தைகள்தான் எங்கே
சுற்றிலும் இருந்த சுற்றமெங்கே சூழலெங்கே
எல்லாம் முடித்துவிட்டு கடலே இப்போது தூக்கமென்ன

கறையான் அரித்த மரக்கட்டைகளாய்
நாம் வாழும் வேளையில்
இயற்கை அன்னையே உன் கோரமுகம் காட்டி
எம்மைச் சிதைத்ததென்ன"

தம்பி மதன்

உங்களின் இந்தக் கவிதை வரிகள் எம் மண்ணின் சோகத்தை அப்படியே வெளிப்படுத்துவனவாக இருக்கிறன. அவ்வரிகளில் கறையான் அரித்த மரக்கட்டைக்கு எம் ஈழ மக்களின் வாழ்வை ஒப்பிட்டது அருமையாக இருந்தது. உங்கள் கவிதை எழுதும் திறனை இன்னும் வளர்பதற்கும்ää கவிதையின் காட்சிப்படுத்தல் திறனை வளர்பதற்கும் சில வளிமுறைகளைச் எழுதுகிறேன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1) ஒப்பீடுகள் : நீங்கள் எழுதிய “கறையான் அரித்த மரக்கட்டை போல் எம் வாழ்வு” என்ற வசனம் போன்றவை. இதில் உவமானம்: கறையான் அரித்த மரக்கட்டை
உவமேயம்: தமிழரின் வாழ்க்கை

2) குறியீடுகள் : நீங்கள் எழுதிய மேல் உள்ள வசனத்தில் உவமானத்தை மட்டும் கவிதையில் பயன்படுத்துவதே இப்போதைய காலங்களில் குறியீடாக சொல்கிறார்கள். இருந்தாலும் குறியீடு என்பது இன்னும் விரிவாகப் பார்கப்படக் கூடியது. அவற்றை நீங்கள் இன்னும் வளரும்போது அறிந்து கொள்வீர்கள். தொடர்ந்தும் மற்றவர்கள் எழுதிய கவிதைகளைப் படியுங்கள்: அப்போதும் இன்னும் விளக்கமாக அறிந்து கொள்வீர்கள்.
எடுத்துக்காட்டாகப் பார்;த்தால்
“கறையான் அரித்த மரக்கட்டை
இன்று கடலாலும் அடிபட்டு
உருக்குலைந்து போனது பார்”

இது தமிழரின் வாழ்வைத்தான் குறிக்கிறது என்பதை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.

இதைவிட சில பொருட்களும் சம்பவங்களும் கூடக் குறியீடுகளாக வரும்;. எடுத்துக்காட்டாக பிரிந்துபோன புரட்சிக் கவிஞன் பாவித்த பேனாவை அவனது நண்பன் எடுத்துக் கொள்கின்ற போது பேனா என்பது புரட்சியின் குறியீடாகவும்ää அதை நண்பன் எடுத்துக்கொண்;ட சம்பவம் நண்பனின் புரட்சியை தானும் தொடரப்போவதையும்; குறியிடுகிறது.

3) தற்குறிப்பேற்றம் : இயற்கையில் நடை பெறும் விடயங்களை நாம் சொல்ல வேண்டிய விடயத்துடன் சேர்த்து எமக்கு சாதகமாக (ஏற்றமாதிரி) பயன்படுத்தல்

எடுத்துக்காட்டாக பார்த்தால் மழை பெய்வது இயற்கை நிகழ்வு. அதையே
‘சுனாமி அழிவுகளால் கலங்கிய வானம் மழையாய் அழுதது.’
என்று எழுதினால் அது தற்குறிப்பேற்றம்.

இப்போதைக்கு இது போதும் இன்னும் வளர வளர மேலும் மேலும் அறிந்து கொள்வீர்கள்

சுடர் முருகையா.

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.